Wednesday, 30 April 2014

எங்கிருக்கிறாய் நீ

எங்கிருக்கிறாய் நீ
எனக்காக பிறந்தவனே

எங்கிருக்கிறாய் நீ

தாயாய் தோழியாய்

மனைவியாய் குழந்தையாய் - உனக்கு

நான் இருக்க விழைகிறேன்

எனவே சொல்

எனக்காக பிறந்தவனே

எங்கிருக்கிறாய் நீ

சின்ன சின்னதாய் கதை பேச...

கோபம் கொண்டு சிணுங்க...

திகட்ட திகட்ட காதல் செய்ய...

உன் அழுக்கு சட்டையை

துவைக்கும் பொழுது

திட்டி கொண்டே உன்னை கொஞ்ச...

நேரம் தாண்டி வரும் பொழுது

வாசல் மறித்து மணி காட்ட....

உனக்கு பிடித்த சமையலுடன்

உன் வருகைக்காக காத்திருக்க....

வாகனத்தின் பின் கட்டில்

மலராய் நான் அமர

புயலாய் நீ செலுத்த....

அவ்வழகில் நான் அசர

இப்படியே ஆயிரம் ஆயிரம்

ஆசைகள் என்னுள் ......

எனவே சொல் காதலனே

எனக்காக பிறந்தவனே

எங்கிருக்கிறாய் நீ !????

அலைபேசி

உன்னிடம் பேச வேண்டும் என்றே

ஒவ்வொரு முறையும்

அலை பேசியை எடுக்கின்றேன்

ஆனால் நான் பேசுவது என்னவோ

அலைபேசியை அணைத்த பின்பு தான்

காதல்

இந்த இலை
என்னை தொட்ட இலை
என்று எப்படி தெரியும் என்றேன்
சருகாகி பறந்த இலை
உன்னை தாண்டி வருகையில்
பச்சையாய் இருக்கிறது என்றாய்
நீ காதலிக்க ஆரம்பித்துவிட்டாய்
என்பதன் மிகச்சிறந்த அறிகுறியே இந்தப்பொய்

00

மழைக்காலத்தில்
நீர் சேமித்து வைத்து
உயிர் வாழும் பாலைவனத்து செடி போல
நீ பேசிய மிச்சத்தை வைத்து வாழ்கிறேன் நான்

00

கண்களை திறந்து மழை துளியை
பெறுவது எப்படியோ
அப்படித்தான் உன் மீதான என் காதல்

00

தாமதமாக வராதே
என்று எதனை முறை சொல்லிருக்கிறேன்
என்றபடி உன்னை முறைத்தேன்
நான் சரியான நேரத்திற்கு வந்தால்
நீ வேற எதாவது செய்து கொண்டிருப்பாய்
தாமதமாக வந்தால்தான்
நீ எனக்காக காத்திருப்பாய்
என் செல்ல காதலி என்றாய்.
என்னவோ போ
நீ பொய் சொன்னால் கூட
நன்றாகத்தான் இருக்கிறது

00

உன் கவிதைகளை
வாசித்து வாசித்து
நானும் கவிதை எழுத கற்றுக்கொண்டேன்
என்றேன்
நானும் உன்னைப்போல் தான்
உன் கண்களை வாசித்து வாசித்தே
கவிதை எழுத கற்றுக்கொண்டேன்
என்றாய் நீ

00

சற்று இடைவெளி விட்டு அமரென்
நமக்கு நடுவில் இடம் கேட்டு அடம் பிடிக்கிறது
"காதல்"

00

இரகசியம் காக்கும்
தேவதை போல்
உன்னை சுமக்கும்
இதயத்தை
உடல் கொண்டு மூடி பாதுகாக்கிறேன்

00

பிரசவம்

ஐயிரண்டு திங்களாய்
அடி வயிற்றில் உயிர் சுமந்து
அணு அணுவாய் இரசித்திருந்து
உயிரிறக்கும் நேரத்தில்
உனதருகே நானிருக்க
உன்கை எனை பிடித்திருக்க
என் கண்ணின் துளி முத்துக்கள்
உன் கைகள் துடைத்தெடுக்க
உன் முத்தங்களை என் நெற்றியில்
பரப்ப, பயந்தேவிட்டேன் நான் ,
உன் முத்தச்சூட்டில் தெரிந்த பதட்டத்தில்
மறுஜென்மம் உனக்கா எனக்கா ????

உன் தவிப்பை நான்கண்டு
என் வலியை அடக்க
வீறிட்ட ஒரு சப்தம் .......
சப்தமிட்டது நானா?
இல்லை உனதுயிரா?

குழப்பங்கள் நீள
கலைத்தது நம் உயிரின்
அழுகை.

உதட்டில் புன்னகையுடன்
செவிலித்தாய் நம் சிசு நீட்ட
கண்களிள் கண்ணீருடன்
நீ பற்றுகின்றாய்
செல்லமாக திட்டுகின்றாய்
"ஏன் உன் அம்மாவை
இப்படி படுத்தினாய் ??"

அழகாக சிரிக்கிறது
"உன் காதலை சோதிக்கத்தான் "
என்பதுபோல .

இதுதான் அர்த்தம் என்று
உனக்கும் புரிந்தது

பெற்ற சோர்வில்
துவண்டிருந்தேன் நான்
ஒரு கையில் குழந்தையுடன்
ஒரு கையில் என்னை வருடுகிறாய்
"அம்மா பாரு " என்கிறாய்

உன் ஸ்பரிசச்சூடு பட்டு
கண் விழித்தேன் நான்
காதலின் சாட்சியை
கையில் வைத்திருந்தாய் நீ ,
உன் கண்கள் நிறைந்திருந்தது
உன் கண்களின் அந்த நிறைவை
இதுவரை கண்டதில்லை நான்
உன் கண்களால் என்னை ஊடுருவினாய்
என் கண்களால் அதை உள்வாங்கினேன்
சிசு சிணுங்கியது
அதற்கான உயிர் திரவத்தை
நான் அளிக்க தயாராக
செல்லமாக சிரித்திட்டு
வெளியேறினாய் நீ

பயணம்

பரிச்சயமில்லா குழந்தைகளின்
பொய் பூசாத புன்னகைகள்
விரோதம் கலந்திடாத
புதிய மனித பார்வைகள்
ஜன்னலோர இருக்கையில்
அமர்ந்தால் கிடைக்கும்
இலவச காற்று
சிறிது நேரம் ஆனாலும்
சுகமானவை தான்
பேருந்து பயணங்கள்
எத்தனை நெரிசல் ஆனாலும்.
சிரமமான வாழ்கையை காட்டிலும்

தோழி

முகம் முழுக்க நேசத்தை
பரத்திக்கொண்டு நீ வரும்போது
பேச்சற்று தான் போகிறது
எப்போதும் எனக்கு....
நீயோ பாசாங்கற்ற மொழியை
பக்குவமாய் சொல்லிச்செல்கிறாய்.......
நான் இருக்கும் அறையில்
நிரம்பி வழிகிறது
பிரியம் ததும்பும் உன் குரல்----
நானோ தீரா நேரத்தை
மௌனத்தில் புதைக்கிறேன்
சில உன்னதங்களை
சொல்லி தெரியவேண்டியதில்லையே
உணர்வாய நீ என் மௌனம் மனசாய்
விரிந்து கிடப்பதை

நட்சத்திரங்களாலான நிலா நீ

நட்சத்திரங்களாலான
நிலா நீ
உன் தேய்பிறை கோபங்களும்
வளர்பிறை நேசங்களும்
எப்போதும் வரவேற்க்கபடுகின்றன
எல்லோரிடமும்
நீ தூக்கி எரியும் நட்சத்திரங்களை
தேடி தேடி எடுத்துவந்தேன்
மறுபடியும் தூக்கி எரிகிறாய்
உன்னிடம் நட்சத்திரங்கள் குறைந்துவிடக்கூடாதென
மறுபடி மறுபடி உன்னிடம் சேர்க்கிறேன்
நீயோ என் செய்கையை பார்த்து
உதட்டை சுழித்து
அழகு காட்டி சிரிக்கிறாய்
இந்தச்சிரிபிற்கு
எத்துனை முறை வேண்டுமானாலும்
தேடலாம் என நினைத்துக்கொண்டு
நானும் சிரிக்கிறேன்

அவளும் அணுவும்

அவளும் அணுவும்
விளையாடிக்கொண்டிருந்தார்கள்
அவள் எதிர்பாரா நேரத்தில்
நெற்றியில் மோதி விட்டு
கை கொட்டி சிரித்தாள் அணு
கோபம் வந்த போதும்
ஏதோ யோசித்து
அவளும் சிரித்தாள் அணுவோடு

அணுவை இடுப்பில் வைத்துகொண்டு
நிலவை காட்டி சோறூட்டினாள் அவள்
பொறாமையில் அணுவை பார்த்து முறைத்து
நிலா

அக்கா தினம் நிலா கிட்ட காட்டி
எனக்கு சோறூற்றியெ நிலாக்கு
வயிறு வலிக்காதா என்று கேட்டாள் அணு
நிலவுக்கு இதை கேட்டு
சிரித்து சிரித்து வயிறு வலித்தது
அவளுக்கும் தான்

ஒரு மில்லிமீட்டர் புன்னகை

1.கடலை விட்டு மணலை மட்டும்
நியாபகார்த்தமாய் நம்முடன்
அனுப்பிவைக்கும் கடற்கறையைபோல்
உன்னை விட்டு உன் புன்னகையை மட்டும்
என்னுடன் அனுப்பிவைப்பாய்.....

2.கண்ணாடியை பார்த்ததெல்லாம்
நீ சிரிக்காதே
உலகம் ஒரு அழகான புன்னகையை
மட்டுமே தாங்கக்கூடியது

3. உன் கண்களை பார்த்து
உன் உதடுகளா ?
இல்லை உன் உதடுகளைப்பர்த்து
உன் கண்களா ?
எதைப்பார்த்து ஏதென்று
தெரியவில்லை
ஆனால் இரண்டும் அழகாய்
சிரிக்க கற்றுக்கொண்டுவிட்டன

4. கூந்தலை கோதி நீ
சிரிக்கும் அழகை
பார்த்ததினால் தான்
காற்று மீண்டும் மீண்டும்
வீசுகிறது ....

அது தெரியாமல்
காற்றிடம் கோபித்துக்கொண்டு
உள்ளே செல்கின்றாயே

5. ஒரு புன்னகையில்
ஊரையே வெளிச்சமாக்கிடும்
அழகான புன்னகைக்கு
சொந்தக்காரி நீ

6. சரியான தருணங்களில்
நேர்த்தியாய் நீ உடையணிவாய்
என்றுனக்குத்தெரியும்..

சரியான தருணங்களில்
மிகச்சரியான புன்னகையையும்
நீ அணிவாய் என்பதுனக்கு
தெரியுமா ?

7. நாட்காட்டியில்
உன் ராசிக்கான
நற்பலனை பார்த்து
நீ சிரித்தாய்
அன்று முதல் நாட்காட்டி
உன் ராசிக்கு மட்டும்
நற்பலனை காட்ட ஆரம்பித்துவிட்டது!!!!

நீயும் நானும்

நீ அழைக்கும் போது உயிர் பெறுவது
என் அலைபேசி மட்டும் அல்ல
நானும் தான்

00
உன் ஒரு அழைப்பிற்கும்
மற்றொரு அழைபிற்குமான
இடைவெளியில் தான்
எனக்கு காதலிக்கவும் காத்திருக்கவும்
கற்றுத்தந்தாய் நீ

00
ஒவ்வொரு நொடியும்
உன்னுடன் வாழ
நான் காத்திருக்கையில்
சில வினாடிகள் மட்டும்
சந்தோஷம் தரும் வண்ணத்துபூச்சி
போல பேசி மறைகிறாய் நீ

00
உன் மனதை வார்த்தைகளாக்கி
மேகத்தில் தூதனுபினாய்
படிக்க தெரியாத
கிராமத்துப்பெண்ணுக்கு
கடிதம் படித்துக்காட்டும்
தபால்காரரைப்போல
உன் மனதை எனக்கு படித்துக்காட்டியது
மழையாய் வானம் ......

உனக்கான நான்

நீ வந்து சென்றதிலிருந்து
நான் கட்டியணைத்துத்தூங்கும்
கரடி பொம்மையை காணோம்
ஆனால் தேடத்தோன்றவில்லை
காரணம் உனக்கு சொல்லவும் தேவையில்லை .....

00

சொற்களை கஷ்டப்பட்டு கோர்த்து
உன்னிடம் சொல்ல வரும்போதெல்லாம்
ஒரு பார்வையால் என்னை தடுமாறவைத்து
அத்தனை சொற்களையும் கொட்டிவிடுகிறாய்
இனி நீயே சென்று பொறுக்கிக்கொள்
என் செல்ல பொறுக்கி.....

00

எனக்கே தெரியாமல்
என்னை காதல் சுமக்க வைத்து
அதை வலிக்காமல் பிரசவிக்கவும் வைத்துவிட்டாய்
உன் ஒற்றை புன்னகையில் ......
உண்மையில் நீ சிறந்த மருத்துவன் தான் போ !!!

00

நான் உன் மீது புகார் செய்ய வேண்டும்
என் செல்ல நாய் குட்டிக்கு உடம்பு சரி இல்லை
நீ இருக்கையில் நான் அதை கொஞ்சியதை
பார்த்து நீ விட்ட உஷ்ணப்பெருமூச்சால்
தான் அதற்கு காய்ச்சல் வந்திருக்க வேண்டும் .....

நாம் பார்த்த அதே நிலவு

உன் கவிதைகளுக்கினி பாடு பொருளாய்
நானிருக்க போவதில்லை

நாம் எப்பொழுதும் சந்திக்கும்
மஞ்சணத்திப்பூ மரத்தடியில்
நீ மல்லிகைகள் சேகரிக்க வேண்டியதில்லை

என் நகத்தழும்பை தடவிப்பார்த்து
நீ சிரிக்கப்போவதில்லை

நான் உடுத்தும் அதே நிறத்தில்
நீயும் உடுத்தி அனிச்சையாய் உடுத்தியதாய்
பொய் சொல்லி என்னை மகிழ்விக்க அவசியமில்லை

நான் கேரளத்தேயிலைகொண்டு
தயாரிக்கும் தேநீருக்கு
அமுதம் என்று பெயர்சூட்டத்தேவையில்லை

இனி தாமதமாய் வருவதற்கு
காரணம் யோசிக்கத்தேவையில்லை

நாம் செல்லும் பாதையில்
கைகள் உரசுகையில் உண்டாகும்
மின்சாரத்தை தனியே செல்லுகையில்
யோசித்துப்பார்த்து சிரிக்கத்தேவையில்லை

இனி என் "ம்" களுக்கும் "ச்" களுக்கும்
அர்த்தம் ஆராயவேண்டிய அவசியமில்லை

இனி நொடிக்கொருமுறை என்னை
"டீ" போடப்போவதில்லை

கண்ணீர் மோதி உடைந்த
நம் காதலை இனி நீயோ, நானோ
திரும்ப எடுக்கப்போவதில்லை

இறுதியாய் சொல்கிறேன்
அன்று நாம் பார்த்த அதே நிலவை
இனி என்றுமே நீ பார்க்கப்போவதேயில்லை